டெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ல் உள்ள பிரிவு 3, பிரிவு 45 உள்ளிட்டவற்றை எதிர்த்து அரசியல் கட்சியினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 27ஆம் தேதி முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்யவும், கைது செய்யவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
கைது நடவடிக்கையின்போது முறைகேடு புகார்கள் தொடர்பாக தகவல்களை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என் தெரிவித்தது. பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பணமோசடி தடுப்புச் சட்டம் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இதுபோன்ற சட்டத்திருத்தத்தை உறுதி செய்வதற்கு முன்பு, அதன் நீண்ட கால தாக்கங்கள் குறித்து கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியல் சாசன அமர்வில் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறைக்கு அளிக்கப்படும் இதுபோன்ற அதிகாரங்கள், அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தீர்ப்பு அரசியல் பழிவாங்களுக்கு ஏற்றார்போல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.