சத்தர்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம், சிதி பகுதியில், சில வாரங்களுக்கு முன்பு பழங்குடி இளைஞர் மீது நபர் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு, தற்போது தான் சற்று அடங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நபரின் முகத்தில் மனித மலம் பூசப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் தற்செயலாக கிரீஸ் படிந்த கையால் தொட்டதற்காக, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தன் முகத்தில், மற்றொரு சாதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மனிதக் கழிவைத் தடவியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டி உள்ளார். பாதிக்கப்பட்டவர் பெயர் தஸ்ரத் அஹிர்வார் என்றும், அவர் ஜூலை 22ஆம் தேதி, காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஓபிசி பிரிவைச் சேர்ந்த ராம்கிருபால் படேல் மீது உரிய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.
சத்தர்பூர் மாவட்டத்தில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள பிகௌரா கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வடிகால் கட்டும் பணியில் தான் ஈடுபட்டிருந்தபோது ஜூலை 21ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. படேல் அருகிலுள்ள பம்பில் குளித்துக் கொண்டு இருந்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்ததால், தன் கையில் கிரீஸ் பட்டு இருந்ததாகவும், தவறுதலாக, தன் கை, படேல் மீது பட்டுவிட்டது.
அதன்பிறகு, படேல் குளிப்பதற்குப் பயன்படுத்தும் குவளையில் அருகில் கிடந்த மனித மலத்தை எடுத்து வந்து, தன் தலை, முகம் உட்பட என் உடலின் பல்வேறு பகுதிகளில் பூசியதாக, மகாராஜ்பூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில் அஹிர்வார் குறிப்பிட்டு உள்ளார்.
பட்டேல் தன்னை சாதி ரீதியாக திட்டியதால், இதுதொடர்பாக, தான் பஞ்சாயத்தில் புகார் செய்து கூட்டத்திற்கு அழைத்து இருந்தேன். அதற்குப் பதிலாக, பஞ்சாயத்து எனக்கு வெள்ளிக்கிழமை ரூ.600 அபராதம் விதித்ததாக, அஹிர்வார் குறிப்பிட்டு உள்ளார். ஏன் போலீசில் புகார் செய்யவில்லை என்று கேட்டதற்கு, அஹிர்வார் வேலையை பாதியில் விட முடியாது என்று கூறினார்.
ராம்கிரிபால் படேல் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள் அல்லது பொது இடங்களில் வார்த்தைகளுக்கு தண்டனை) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரி பாகேல் சிங் தெரிவித்து உள்ளார்.
அஹிர்வார், சக தொழிலாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகில் குளித்துக்கொண்டிருந்த படேலிடம் கேலி செய்து கொண்டிருந்ததாக பாகேல் கூறினார். "அஹிர்வார் படேலின் கையில் கிரீஸ் இருந்த நிலையில், அவர்கள் ஒருவரையொருவர் விளையாட்டாக வீசிக் கொண்டிருந்தனர். அதன்பின், படேல் மனித மலத்தை கையால் எடுத்து அஹிர்வாரின் முதுகில் வீசியதாக," என்று பாகேல் சிங், தெரிவித்து உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பழங்குடியின இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்தல் தற்போது பட்டியலின வகுப்பை சேர்ந்தவரின் முகத்தில் மனித மலம் பூசிய நிகழ்வு என தொடர்ந்து பரபரப்பு சம்பவங்கள் அங்கு நடைபெற்று வருவது வெட்ட வெளிச்சமாகி வருவது அங்கு அரசியல் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: யமுனையில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு - அபாய அளவை கடந்ததால் மக்கள் அச்சம்!