ஹைதராபாத்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் முதல் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று (செப்.16) தொடங்கி செப்.16, 17 ஆகிய தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, “காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும், மணிப்பூரில் 150க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மே 5ஆம் தேதி முதல் மணிப்பூர் விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பல நாடுகளுக்குச் சென்று வருகிறார். ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவும், பின்னர் ஜி20க்கு வரவும் அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால், மணிப்பூருக்குச் செல்ல இரண்டு மணிநேரம் கூட அவருக்கு இல்லை.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மணிப்பூரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் குறிப்பிட்டு பேசினார். அதை தவிர, மணிப்பூரைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை” என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த சந்திப்பின்போது சோனியா காந்தி ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். அது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கருத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டி (Congress Working Committee) நிராகரித்து விட்டது. நாடாளுமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணைய மசோதாவுக்கு கட்டாயம் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “மணிப்பூரில் நடந்த வன்முறை, கேரள முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டியின் மறைவு, இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சோகம் என மூன்று தீர்மானங்களை காங்கிரஸ் காரிய கமிட்டி நிறைவேற்றியது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 5 மாநில சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் - சோனியா, கார்கே தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்!