நவ்சாரி: பொதுவாக கோடை காலங்களில் மாம்பழங்கள் அதிகளவில் விற்பனையாகும். தமிழ்நாட்டில் அல்போன்சா, பங்கன பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் பிரபலம். இந்நிலையில், குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே விவசாயி ஒருவர், வெளிநாட்டு மாம்பழங்கள் உட்பட 21 வகையான மாம்பழங்களை விற்பனை செய்வதுடன், நல்ல லாபத்தை ஈட்டியுள்ளார்.
ஜலல்பூர் தாலுகா ஆதான் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் பாய் நாயக். டெக்ஸ்டைல்ஸ் பொறியாளரான இவர், விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர். தனக்கு சொந்தமான 25,000 சதுர அடி நிலத்தில் மாமரங்களை வளர்க்க திட்டமிட்டார். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாங்கன்றுகளை நட்டு வைத்தார். அதில் இஸ்ரேல், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த கன்றுகளும் அடங்கும்.
இந்நிலையில் நடப்பாண்டு, நாயக்கின் தோட்டத்தில் மா விளைச்சல் அமோகமாக உள்ளது. இஸ்ரேலின் மாயா, பாகிஸ்தானின் ஹூஸ்னாரா மற்றும் மோகன், ரடோல், சோன்பரி, பிளாக் அல்போன்சா, மல்கோவா, கேசர், அர்கா புனீட், அம்ரி, நீலம் உள்ளிட்ட உள்நாட்டு ரக மாம்பழங்களும் நல்ல விளைச்சல் கண்டன. ஒரே நிலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாம்பழ ரகங்கள் விளைந்ததை கண்டு விவசாய ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து நாயக் கூறுகையில், "மாங்கன்றுகளை கடந்த 10 -12 ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தேன். இந்தாண்டு 2,000 கிலோ மாம்பழங்களை விற்பனை செய்துள்ளேன். முன்பதிவு செய்து கொண்ட குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே மாம்பழங்களை விற்பனை செய்தேன். இதன் மூலம் எனக்கு ரூ.1 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இஸ்ரேலின் மாயா ரக மாம்பழம் மிகவும் பிரபலமானது. சோன்பரி ரக மாம்பழங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு. 20 கிலோ சோன்பரி மாம்பழங்களுக்கு ரூ.3,000 விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர்" என்றார்.
கடந்த 2010ம் ஆண்டு நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற மாம்பழ கண்காட்சியில், நாயக் முதல் பரிசை தட்டிச்சென்றார். தனது நிலத்தில் அவர் மாமரங்கள் மட்டுமின்றி, பூக்கள், காய்கறிகள், கனிகள் தரும் பிற மரங்களையும் பராமரித்து வருகிறார்.
இதையும் படிங்க: டெல்லி அவசர சட்ட விவகாரம்: சீதாராம் யெச்சூரியை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!