டெல்லி: 2022ஆம் ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று(டிச.25) பிரதமர் நரேந்திரமோடி மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதை பார்க்கிறோம். அதேநேரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் மக்கள் அனைவரும் கொரோனா குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- சீனாவில் ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டதே தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க காரணம்.
இந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பல வழிகளில் உத்வேகம் அளித்துள்ளது. அதன்படி, உலகில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா தனக்கென ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளது. சுமார் 220 கோடி தடுப்பூசி டோஸ்களை இந்தியா செலுத்தியுள்ளது.
அதேபோல், உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாட்டின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல், விண்வெளி, பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளிலும் சாதனை படைத்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: "இருநாட்டு உறவுகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்" - சீனா!