டெல்லி : அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. மேலும் ராமர் கோயில் திறப்பு பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் திட்டம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "காங்கிரஸ் தலைவர் மற்றும் கட்சியின் பிற முக்கியத் தலைவர்கள் அயோத்தி கோயில் திறப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.
கடந்த மாதம் காங்கிரஸ் தேசிய தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகின்றனர். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விவகாரம். ஆனால் அயோத்தி ராமர் கோயில் திறப்பை அரசியல் திட்டமாக பாஜக மற்றும் அர்.எஸ்எஸ் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. முழுமையாக கட்டி முடிக்கப்படாத அயோத்தி ராமர் கோயிலுக்கு திறப்பு விழா நடத்தி அதன் மூலம் தேர்தல் லாபத்தை அடைய பாஜக திட்டமிட்டு உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை தவிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், லல்லு யாதவ், சீதாராம் யெச்சூரி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உளிட்ட முக்கிய எதிர்க்கட்சி புள்ளிகளுக்கு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன்! ஆனாலும் ஆந்திர உயர்நீதிமன்றம் கண்டீசன்? என்ன தெரியுமா?