டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட 9 வயது பட்டியலினச் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த புகைப்படத்தை மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் விதிகளை ராகுல் காந்தி மீறியதாக்க ட்விட்டர் நிறுவனம் அந்தப் பதிவை நீக்கியது.
இதைத்தொடர்ந்து, அவரது ட்விட்டர் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதாவது ட்விட்டர் செயலியின் விதிமுறையின்படி, ஒருவர் விதிமுறைகளை மீறி சர்ச்சைக்குரிய பதிவுகள், புகைப்படங்கள், காணொலிகளைப் பதிவிட்டால் அவரின் கணக்கு 24 மணிநேரத்துக்கு மட்டும் முடக்கப்படும்.
அந்த வகையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கும் இப்படி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அவரது கணக்கு முடக்கப்பட்டிருந்தாலும், அவரால் ட்விட்டரில் குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டும் பயன்படுத்த முடியும். அவரால் பிறரது பதிவுகளைப் பார்க்கவும், அவரை பின் தொடர்பவர்களுக்கு நேரடி செய்திகளை அனுப்பவும் முடியும்.
ட்வீட் பதிவிடுதல், ட்வீட் மறுபதிவிடுதல் (Retweets), பின் தொடர்தல் (Follow), லைக்ஸ் உள்ளிட்டவைக்கு செயல்படாது. முன்னதாக ராகுல்காந்தி கணக்கு முடக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் அதை மறுத்திருந்தது.
நீதியின் வழியில் ராகுல்!
ராகுல் காந்தியின் நீக்கப்பட்ட பதிவு: ”இந்த நாட்டு மகளின் பெற்றோருடைய கண்ணீர் ஒன்றை மட்டும்தான் சொல்கின்றன - அவர்களின் மகள் நீதிக்குத் தகுதியானவர். நீதியின் பாதையில் அவர்களோடு நான் இருக்கிறேன்”.
இதே விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கும், டெல்லி காவல்துறைக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீரஜ் சோப்ராவை பாராட்டிய ராகுல் காந்தி!