மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் அப்சந்த் கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீபாய் என்பவரை, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காணொலி வாயிலாக கெளரவித்துள்ளார். பாலியல் கும்பலிடம் சிக்கவிருந்த பெண்ணை, உயிரை பணையம் வைத்து காப்பாற்றியதை சுட்டிக்காட்டி ரியல் ஹிரோ என ஸ்ரீபாயை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீபாய் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நான் வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த சமயத்தில், நிர்வாண கோலத்தில் ஒரு பெண் என்னை நோக்கி காப்பாற்றுங்கள் என அழுதபடியே ஓடி வந்தார். அவருடன் இரண்டு சின்ன குழந்தைகள் இருந்தன. அப்பெண்ணை துரத்தியபடி மூன்று பேர் வந்தனர். அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமின்றி உயிருடன் எரிக்க துரத்தியுள்ளனர். என்னிடம் அவளை ஒப்படைக்குமாறு மிரட்டினர்.
நிலையை புரிந்துகொண்டு, அறுவடைக்கு வைத்திருந்த அரிவாளால் கும்பலை விரட்டினேன், உடனடியாக எனது மகனை அழைத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க சொன்னேன். தகவலின்பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து அப்பெண்ணின் உயிரை காப்பாற்றினார்கள்" என்றார்.