ஹைதராபாத்: தமிழ்நாடு அரசைப் பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதிய உணவுத்திட்டத்தை தொடர்ந்து, காலையிலும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நாடு முழுவதும் வரவேற்பை பெற்று பல மாநிலங்களில் பேசு பெருளாக மாறியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு செய்ய தெலங்கானா மாநிலத்தில் இருந்து குழுவினர் வந்தனர். பின்னர், தெலங்கானாவில் உள்ள 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று (அக் 6) தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ரங்காரெட்டி மாவட்டத்தில் “முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை” தொடங்கி வைத்தார். மேலும், பல இடங்களில் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர். சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைமுறைக்கு வரவுள்ள இந்த திட்டத்தால், 28 ஆயிரம் பள்ளிகளில் பயிலும் 23 லட்சம் குழந்தைகள் பயன் அடைய உள்ளனர்.
தெலங்கானா அரசு இந்த காலை உணவுத் திட்டத்திற்கு 45 நிமிடங்கள் ஒதுக்கி உள்ளது. காலை 8.45க்கு பள்ளி தொடங்கும் நிலையில், 8 மணியளவில் காலை உணவு பரிமாறப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த மாதம் விஜயதசமி பண்டிகை விடுமுறைக்குப் பின் அமல்படுத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தினங்கள் | உணவு விபரம் |
திங்கள் | இட்லி - சாம்பார் அல்லது உப்புமா |
செவ்வாய் | பூரி-உருளைக்கிழங்கு அல்லது தக்காளி சாதம் |
புதன் | உப்புமா - சாம்பார் அல்லது அரிசி கிச்சடி |
வியாழன் | திணை இட்லி சாம்பார் அல்லது பொங்கல் சாம்பார் |
வெள்ளி | அவல் உப்புமா அல்லது திணை இட்லி |
சனி | பொங்கல் சாம்பார் அல்லது காய்கறி புலாவ் |
திட்டத்தின் குறிக்கோள்: மேலும் இந்த திட்டத்தின் முக்கிய கோட்பாடாக பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், குழந்தைகளில் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதனை செயல்படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தினால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைய உள்ளனர்.
காலை உணவுத் திட்டம் சிறந்த முறையில் செயல்படுவதற்கும், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து சென்றடையும் வகையிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவின் தரத்தை ஆய்வு செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்