ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், ரகுராம் கிருஷ்ணராஜா எம்.பி.; இவர் கடந்த சில மாதங்களாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கட்சியில் இருந்துகொண்டே பேசி வந்தார்.
ஜெகன் மோகன் மீது நிலுவையில் இருந்த சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால் ஜெகன் மோகன் பிணை விதிகளை மீறி வருவதாகவும், அவரின் பிணையை ரத்து செய்யவேண்டும் எனவும் ரகுராம் கிருஷ்ணராஜா குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக அவரின் மேல் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரின் சிறைக் காவலை நீட்டிக்க சிபிசிஐடி காவலர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அப்போது, சிறைக் காவலின்போது சிஐடி காவலர்கள் தன்னை கடுமையாக அடித்து, துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் ரகுராம் கிருஷ்ணராஜா வாக்குமூலம் அளித்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், ரகுராம் கிருஷ்ணராஜாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கும்படி உத்தரவிட்டனர். கிருஷ்ணராஜா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற மறுத்ததால், பிரியா மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2 நிதி காலாண்டுகளுக்குப் பின்பு கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!