டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்றுகொண்டு வெளிநாடு தப்பியோடிய பிரபல வைரவியாபாரி மெகுல் சோக்ஸி. இவர் ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன் வாழ்ந்துவந்தார். இந்நிலையில் மே 23ஆம் தேதி மெகுல் சோக்ஸி கடத்தப்பட்டார். இந்தக் கடத்தலில் இந்திய உளவுத்துறைக்கு சம்பந்தம் இருப்பதாக மெகுல் சோக்ஸியின் மனைவி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, 26ஆம் தேதி டொமினியன் நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை கைது செய்து நாட்டுக்கு கொண்டுவர மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ), அமலாக்கத்துறை, வெளியுறவு அலுவலர்கள் மற்றும் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் என எட்டு பேர் டொமினியன் நாட்டுக்கு கத்தார் நாட்டின் தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் சென்றனர்.
அங்கு அவரை கைது செய்து, தங்களுடன் நாட்டுக்கு திரும்ப பிடித்து வர வேண்டும் என உத்தேசித்திருந்தனர். ஆனால் அவரை கைது செய்ய முடியவில்லை. மாறாக அவர் சிறையில் இருந்தபடியே சிபிஐ, அமலாக்கத்துறை, இந்திய வெளியுறவுத் துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தண்ணிகாட்டியுள்ளார்.
இதையடுத்து 8 அலுவலர்களும் வெறுங்கையுடன் நாடு திரும்புகின்றனர். மெகுல் சோக்ஸி மீதான வழக்கு விசாரணையை டொமினிகன் நீதிமன்றம் ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அங்கு மெகுல் சோக்ஸி மீது சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிபதி முன்னிலையில் ஆஜரான மெகுல் சோக்ஸி, சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அப்போது நீல நிறச்சட்டை மற்றும் கறுப்பு கால்சட்டை அணிந்திருந்தார்.
மெகுல் சோக்ஸி மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கைது செய்ய சிபிஐ முனைப்பு காட்டியது. இந்நிலையில், அவர் 2018 ஜனவரியில் நாட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் மே 27ஆம் தேதியன்று, மெகுல் சோக்ஸியின் படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அப்போது, அவரது கைகளில் பல காயங்கள் மற்றும் கண் வீங்கியிருந்ததை பார்க்க முடிந்தது.
பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்ஸி, மோசடி தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் (தாய்வழி மாமா) என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடி தூள்- தடுப்பூசி ஆராய்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கிய கேரளா!