புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மக்கள் நலத்திட்ட கோப்புகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அழைப்பிற்காக தொடர்ந்து 10 நாட்களாக காத்திருந்தபோதிலும், அவரை சந்திக்க ஆளுநர் கிரண்பேடி இதுவரையிலும் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு இன்று(ஜன.19) திடீர் தர்ணா போராட்டத்தில் அமைச்சர் ஈடுபட்டுள்ளார். அமைச்சருக்கு ஆதரவாக முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்ட களத்திற்கு செல்ல முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியினர், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஆளுநர் மாளிகைக்கு வெளியே முதலமைச்சர்-அமைச்சர்கள் நடத்திவரும் போராட்டத்தின் எதிரொலியாக அம்மாநில டிஜிபி ரன்வீர் கிருஷ்ணாவிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.