பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங் விழாவைப் புறக்கணித்தார்.
2017ஆம் ஆண்டு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிய முதலமைச்சராக சரண்ஜித் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் முதல் பட்டியலின முதலமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி எதிர்க்கட்சியான ஷிரோன்மணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள பட்டியலின ஒருவரை காங்கிரஸ் முதலமைச்சராக நியமித்துள்ளது.
மாநிலத் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பதவியேற்றதிலிருந்து அமரீந்தருக்கும் சித்துவுக்கும் பனிப்போர் நிலவியது. ராகுல் காந்தியின் ஆதரவு சித்துவுக்கு கிடைத்ததால் அமரீந்தர் பதவி காலியானது. இந்நிலையில், கட்சி மேலிடத்தின் நடவடிக்கை மீதான தனது அதிருப்தியை அமரீந்தர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கரோனா: 295 பேர் மரணம்