இந்தியாவில் நிலவிவரும் கரோனா இரண்டாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆய்வு கூட்டம் நடத்தியது. மேலும் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களைச் சேர்ந்த அரசு உயர் அலுவலர்களிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின்னர் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இரண்டாம் நிலை காரணமாக பல்வேறு பகுதிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நாட்டின் 30 மாவட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாதிப்பு தீவிரமடைந்த பகுதிகளில் எந்த வித தயக்கமும் இன்றி ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு நிலவரம் குறித்து மாநில அரசுகளிடம் தொடர்ச்சியான ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 12 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மாநிலங்களில் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட் எனப்படும் நோய் பாதிப்பு தன்மை 15 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது.