2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, ரயில்வே துறைக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அடுத்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையின் மூலதன செலவுக்காக மட்டும் 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா 2030க்கு என தேசிய ரயில் திட்டத்தை தயாரித்துள்ளோம். 2030ஆம் ஆண்டுக்குள், எதிர் கால தேவைக்கான ரயில் தொழில்நுட்பம் உருவாக்கப்படும். இதன்மூலம், தளவாடம் அமைப்பதற்கான செலவு குறையும். மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமே தளவாட செலவுகளை குறைப்பதாகும்.
ஜூன் 2022ஆம் ஆண்டுக்குள், மேற்கு மற்றும் கிழக்கு திசைகளுக்கான பிரத்யேக சரக்கு நடைபாதை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில், சோம்நகர் - கொமோ இடையே 263.7 கிமீ தொலைவுக்கு பொதுத்துறை, தனியார் துறையின் ஒருங்கிணைப்பில் பிரத்யேக சரக்கு நடைபாதை அமைக்கப்படும். அதேபோல், அடுத்து வரும் ஆண்டுகளில், கொமோ, தன்குனி இடையே 274.3 கிமீ தொலைவுக்கு சரக்கு நடைபாதை அமைக்கப்படும்.
கரக்பூரிலிருந்து விஜயவாடா வரையிலான கிழக்கு கடற்கரை நடைபாதை, பூசாவல் - கரக்பூர் - தன்குனி ஆகியவற்றை இணைக்கும் கிழக்கு - மேற்கு நடைபாதை, இதர்சியிலிருந்து விஜயவாடா வரையிலான வட - தெற்கு நடைபாதை அமைக்கப்படும்" என்றார்.