நாக்பூர்: மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, மர்ம நபர்கள் மூன்று முறை மிரட்டல் அழைப்பு விடுத்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். மகர சங்கராந்தி விழாவை கொண்டாட மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்றுள்ளார்.
நிதின் கட்கரியின் அலுவலக தொலைபேசிக்கு அடுத்தடுத்து மூன்று முறை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பணம் கேட்டும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதின் கட்கரி அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு மூன்று மிரட்டல் அழைப்புகள் வந்த நிலையில், அழைப்புகளின் விவரப் பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருவதாக போலீசார் கூறினர்.
மேலும் நிதின் கட்கரியின் வீடு, அலுவலகம், அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு முதல் நாள் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023ஐ அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ’ஆட்டோமொபைல் உற்பத்தியில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவாகி வருவதாகவும், 7.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்திய ஆட்டோமொபைல் துறை விரைவில் 50 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் வளர்ச்சி பெறும்’ என்றும் கூறினார்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்திற்கு இதே போல் மர்ம நபர்கள் மிரட்டல் அழைப்பு விடுத்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மர்மப் பொருட்கள் எதுவும் கண்டறியப்படாத நிலையில் போலி மிரட்டல் எனப் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: லஞ்சம் கொடுத்து நாடு கடத்தலை தாமதப்படுத்தும் மெகுல் சோக்சி - திடுக்கிடும் தகவல்