ஹைதராபாத்: டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், தெலங்கானா எம்எல்சி உறுப்பினருமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைக்கு ஆஜராகுமாறும் கடந்த 2ஆம் தேதி சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், 11ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) விசாரணைக்கு தயாராக இருப்பதாக கவிதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த (டிசம்பர் 11ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை ஹைதாராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
முன்னதாக சிபிஐ அதிகாரிகளின் விசாரணையை கண்டித்து கவிதாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் கவிதா அக்கா" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அடங்கிய போஸ்டர்களை கையில் ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மதுபான ஊழல் தொடர்பான எப்.ஐ.ஆர் நகல் மற்றும் புகார் மனுவை இணையதளத்தில் ஆராய்ந்ததில் தனது பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என கவிதா தரப்பில் சிபிஐக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள சி.பி.ஐ., டெல்லி நீதிமன்றத்தில் மதுபான ஊழல் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கவிதாவின் பெயர் இருந்ததாகவும், அதனடிப்படையில் 7 குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான ஊழல் தொடர்பாக தொழிலதிபர் அமித் அரோராவை கைது செய்து விசாரித்ததில், சவுத் குரூப் என்ற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டதாக கூறியுதாகவும், இந்த சவுத் குரூப் நிறுவனம் சரத்ரெட்டி, கவிதா, மகுந்தாரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இமாச்சல் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு