புல்தானா: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - நாக்பூர் நெடுஞ்சாலையில் புல்தானா மாவட்டத்தில் மல்காபூரில் உள்ள லட்சுமி நகர் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று (ஜூலை 29) அதிகாலை 3 மணி அளவில் அமர்நாத் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், மற்றொரு தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்து உள்ளனர்.
தகவல் அறிந்த புல்தானா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் புல்தானா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 35 முதல் 40 பக்தர்கள் உடன் பேருந்து ஹிங்கோலிக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து அரங்கேறி உள்ளது.
விபத்துக்கு உள்ளான மற்ற பேருந்து நாக்பூரில் இருந்து நாசிக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 25 முதல் 30 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி நொறுங்கின. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த முதற்கட்ட தகவல்களின்படி, நாசிக் நோக்கிச் சென்ற பேருந்து, ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. நாசிக் நோக்கிச் சென்ற பேருந்து இரண்டாவது பேருந்துக்கு முன்னால் வந்ததால் நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்
சந்தோஷ் ஜக்தாப் (வயது 45) பாண்டகான், ஹிங்கோலி ( பேருந்து ஓட்டுநர்)
சிவாஜி தனாஜி ஜக்தாப் (வயது 55) பாண்டகான், ஹிங்கோலி
ராதாபாய் சக்காராம் காடே (வயது 50) ஜெய்புர், ஹிங்கோலி
சச்சின் சிவாஜி மகதே (வயது 28) லோகான், ஹிங்கோலி
திருமதி அர்ச்சனா குகாஷே (வயது 30) லோகான், ஹிங்கோலி
திருமதி கன்ஹோபத்ரா டெகாலே (வயது 40) கேசபூர், ஹிங்கோலி
படுகாயம் அடைந்தவர்கள் சிலரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை 1ஆம் தேதி, மகாராஷ்டிராவில் சம்ருத்தி - மஹாமார்க் விரைவுச் சாலையில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சம்ருத்தி விரைவுச் சாலையில் நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, புல்தானாவில் உள்ள சிந்த்கத்ராஜாவில் அதிகாலை 1.32 மணியளவில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த 26 பேர் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தில் ‘மியான்மர்’.. உண்மை நிலவரம் என்ன?