கர்நாடகம்: பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு (BTS 2021) இன்று தொடங்குகிறது. இம்மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு தொடங்கிவைக்கிறார்.
இது குறித்து பெங்களூருவில் உயர் கல்வி, தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வத்நாராயணா செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, "இந்தியாவின் தொழில்நுட்ப மாநாடாக நடக்கும் 24ஆவது பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு பெங்களூரு, தாஜ்வெஸ்ட் எண்ட் விடுதியில் இன்று தொடங்குகிறது. நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கும் மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு தொடக்கிவைக்கிறார்.
இணையவழியில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்டாலி பென்னட், ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.
முதல்முறையாக தென் ஆப்பிரிக்கா, வியத்நாம், ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு, சிட்னி உரையாடல் மாநாடு மூலம் முதல்முறையாக கர்நாடகம், ஆஸ்திரேலியா இடையேயான பங்களிப்பு குறித்து பேசப்படுகிறது.
நவம்பர் 18ஆம் தேதி நடக்கும் சிட்னி உரையாடல் மாநாட்டில் பிரதமர் மோடி இணையவழியில் பங்கேற்றுப் பேசுகிறார். இந்நிகழ்ச்சி பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டிலும் ஒளிபரப்பப்படும்.
முதல் முறையாக இந்திய புத்தாக்கக் கூட்டணி, இந்திய-அமெரிக்க மாநாடு அறிமுகம் செய்யப்படுகிறது. உலகின் இரு முன்னோடி நாடுகள் ஒன்றிணைகின்றன. இந்த மாநாட்டில் 75 கருத்தரங்குகள் நடக்கவிருக்கின்றன.
இதில் 300 அறிஞர்கள் உரையாற்றுகிறார்கள். ஐந்தாயிரம் நிறுவனங்கள், ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். 300 அரங்குகள் கொண்ட கண்காட்சி இடம்பெறுகிறது. இதைக் காண 20 ஆயிரம் பேர் வருகை தரவிருக்கிறாா்கள். இந்த மாநாட்டின் கருத்தரங்குகளில் இணையவழியில் பங்கேற்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிதக்கும் வீட்டை பார்த்திருக்கிறீர்களா - மழை,வெள்ளம் வந்தா கூட ஒண்ணும் பண்ண முடியாது!