கரோனா பாதிப்பு அதிகமுள்ள எட்டு மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிய பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் வி.கே. பால் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மோடி, "கரோனா சூழல் மோசமாக உள்ள மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன். தடுப்பூசிகளை எப்படி விநியோகம் செய்வது என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. தற்போது, தெளிவான திட்டத்தை வகுத்துள்ளோம். அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளால், கரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் இறப்பு விகதமும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உள்ளது.
கரோனா மேலாண்மையில் இந்தியாவுக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. இதுகுறித்த தரவுகள் உள்ளன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை 5 விழுக்காட்டிற்கு கீழ் கொண்டு வர வேண்டும். இறப்பு விகிதத்தை 1 விழுக்காட்டிற்கு கீழ் கொண்டு வர வேண்டும். குளிர் சேமிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்" என்றார்.