அகமதாபாத் (குஜராத்): குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த காஜல் மஞ்சுளா என்னும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய சாதி சான்றிதழில் இருந்து சாதி, மதத்தின் பெயரை நீக்கி 'சாதி, மதம் அற்றவர்' எனச் சான்றிதழ் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "நான் சாதி, மத அடையாளங்களை துறக்க விரும்புகிறேன். வருங்காலங்களிலும் எங்கும் குறிப்பிட விரும்பவில்லை. அதனால் சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் தர்மேஷ் குர்ஜார் கூறுகையில், "நம் நாடு மற்றும் சமூகத்தில் சாதி, மதப் பாகுபாட்டால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. மனுதாரரும் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார். மனுதாரர் ராஜ்கோர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர், தற்போது சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார்" என்றார்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் சினேகா பிரதீபராஜ் என்பவருக்குச் சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உத்தரவின் அடிப்படையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் காஜல் மஞ்சுளா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகா : 'சிவமணி' என மகனுக்கு பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!