டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று(ஜூலை 18) தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, அக்னிபத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தின.
குறிப்பாக விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி, காங்கிரஸ், ஆம்ஆத்மி மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நடவடிக்கைகள் அனைத்தும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சில புதிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவையும் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.