பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, இரண்டு அமைச்சர் பதவி வழங்க என்.ஆர். காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தார்.
இதுவரை துணை முதலமைச்சர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் அவர் அப்செட்டில் இருப்பதாக புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும் என பாஜக தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள புதுச்சேரி மேலிடப் பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக தலைவர்களுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நமச்சிவாயம் திடீரென நேற்று பெங்களூரு சென்றனர்.
நிர்மல்குமார் சுரானாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சுவாமிநாதன், நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
![மருத்துவமனையில் சுரானா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-03-bjp-namasivayam-return-tn10044_04062021085720_0406f_1622777240_232.jpg)
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர். அப்போது துணை முதலமைச்சர் பதவிக்குப் பொறுத்து இருக்குமாறு சமாதான முயற்சி நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மருத்துவமனையில் இருப்பதால் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் சிடி ரவி, ராஜீவ் சந்திரசேகர் எம்பி ஆகியோர் இன்று நண்பகல் புதுச்சேரி வருகின்றனர்.
![பாஜகவுக்கு 2 அமைச்சர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/pm-modi-wishes-pondy-cm-n-rangasamy_0406newsroom_1622777681_150.jpg)
முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சபாநாயகர், இரு அமைச்சர்களுக்கான பட்டியலை அளிக்க உள்ளனர். அந்த உத்தேசப் பட்டியலில் அமைச்சர் பதவிகளில் நமச்சிவாயம், ஜான் குமார் சபாநாயகராக செல்வம் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்பட்டியலை இன்று முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து அளிக்க உள்ளனர். அவர் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அமைச்சர் பதவிக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் சேர்த்து துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்க உள்ளார்.
![பாஜகவுக்கு 2 அமைச்சர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/pondy-gov--cm-n-rangasamy_0406newsroom_1622777681_817.jpeg)
இதனை அடுத்து வரும் 7ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. 14ஆம் தேதி பாஜகவின் இரண்டு அமைச்சர்கள், என்.ஆர். காங்கிரசின் மூன்று அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.