மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவிவருகிறது. பாஜகவை வெளிமாநில கட்சியாக விமர்சித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை பாஜக அழித்துவிடும் என மம்தா எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இதற்குப் பதிலடி தந்த பிரதமர் மோடி, "தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மம்தா நந்திகிராமில் போட்டியிடுகிறார். வேறு தொகுதியில் அவரால் போட்டியிட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
வார்த்தைப் போரின் உச்சகட்டமாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா வாரணாசியில் போட்டியிடவுள்ளதாக திரிணாமுல் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, "மம்தா வெளியே ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
வாரணாசிக்கு உங்களை வரவேற்கிறேன். ஹல்தியாவிலிருந்து வாரணாசிக்கு ஒரு கப்பல் செல்கிறது. இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன். பனராஸ் மக்கள் பெரிய மனது படைத்தவர்கள். உங்களை சுற்றுலாப் பயணி என்றோ, வெளிமாநிலத்தவர் என்றோ அழைக்க மாட்டார்கள். மேற்கு வங்க மக்கள் போல் பெரிய மனது படைத்தவர்கள்" என்றார்.
கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.