சோன்பத்ரா (உத்திரப்பிரதேசம்): உத்திரப்பிரதேச மாநிலத்தில், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், ராம்துலார் கோண்ட். பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் மீது, கடந்த 2014ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் மையர்பூர் போலீசார் ராம்துலார் மீது 376 (கற்பழிப்பு), 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அதன் பின்னரே இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
எனவே, அப்போது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, ராம்துலார் சட்டமன்ற உறுப்பினர் ஆனது எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த டிச.12ஆம் தேதி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்துலார் கோண்ட் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், தீர்ப்பு அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த ராம்துலார் கோண்ட்டிற்கு இன்று (டிச.15) 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, சோன்பத்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வகையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற உ.பி-யைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்துலார் சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் சத்யபிரகாஷ் திரிபாதி கூறுகையில், “பாலியல் வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட துத்தி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தீர்ப்புக்கு முன், ராம்துலாரின் வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை ராம்துலார் முழுவதுமாக கவனித்துக் கொள்வார் எனவும் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எம்.பி - எம்.எல்.ஏ நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அஹ்சன் உல்லா கான், சிறுமியின் மறுவாழ்விற்காக இன்று வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராம்துலாருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சித்திபெட் ஆட்சியரின் பாதுகாவலர் திடீர் தற்கொலை! என்ன நடந்தது?