பாட்னா: பிகார் மாநிலம் பிஜ்வார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகள் கடத்தப்பட்டதாக 2015ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், அவரது மகளை ஒரு மாதத்திற்குள் மீட்டனர். ஆனால் இந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்ற, ஷாம்ஷாத் என்பவர் தப்பியோடிவிட்டார்.
ஷாம்ஷாத் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அனார்கலி கிராமத்தைச் சேர்ந்தவர். போலீசார் சுமார் ஆறு ஆண்டுகளாக ஷாம்ஷாத்தை தேடி வந்த நிலையில், அவர் கொய்டாங்கி என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஷாம்ஷாத்தை கைது செய்தனர். அங்கு ஷாம்ஷாத்திற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
ஷாம்ஷாத் ஏராளமான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 12 பெண்களை திருமணம் செய்திருப்பதும், 13ஆவதாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதில் ஏமாற்றப்பட்ட 12 பெண்களுக்கும் ஷாம்ஷாத்திற்கு ஏற்கனவே திருமணமானது தெரியவில்லை என்பதுதான் வியப்பே. இதுவரை போலீசார் ஷம்ஷாத்தின் ஏழு மனைவிகளை தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்துள்ளனர். 12 திருமணம் செய்ததை ஷாம்ஷாத் ஒப்புக் கொண்டதையடுத்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மும்பை 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கைது