புதுச்சேரி: மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள், இந்தியாவில் கொண்டாடப்படும் போகி பண்டிகை, பழையன கழித்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையை முன்னர் ‘போக்கி’ என்றழைத்தனர்.
நாளடைவில் அந்தச் சொல் மருவி ‘போகி’ என்றாகி விட்டது. மேலும் இந்த போகி பண்டிகையின் போது, வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை புறக்கணித்து, புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில், மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
அன்றைய நாள், வீட்டில் தேங்கி இருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எரிந்து பொசுக்கி, வீட்டை மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையும் படிங்க: மீண்டும் பொங்கல் வாழ்த்து மடல்.. புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்!
பல்வேறு தெய்வீக குணங்களைத் தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இந்த போகி பண்டிகை உணர்த்துகிறது என்பது நம்பிக்கை. இவ்வளவு புகழ்பெற்ற போகி பண்டிகையை மீட்டெடுக்கும் வகையிலும், மாணவ மாணவிகளுக்கு இந்த தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் கடந்த 22 ஆண்டுகளாக லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டையில் உள்ள இளைஞர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் மாணவ மாணவிகளோடு ஒரே இடத்தில் ஒன்று கூடி போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், போகி பண்டிகையான இன்று (ஜன.14) விடியற்காலை லாசுப்பேட்டை ஏர்போர்ட் மைதானத்தில் ஒன்று கூடிய இளைஞர்கள், ஒரே இடத்தில் தீ மூட்டி பிரமாண்ட இசைக் கச்சேரியுடன் ஆடி பாடி போகியின் மகத்துவத்தை மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் எடுத்துரைத்து, ஒன்றாக ஆனந்தமாக போகியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: போகி பண்டிகை 2024; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!