பிகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் நேற்றிரவு மூன்று கையெறி குண்டுகள், ஒரு டெட்டனேட்டர் எடுத்துச் சென்றவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
விசாரணையில் அந்த நபர் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்பது தெரியவந்தது. அந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்த சாண்டயூசி நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து பருத்திப் பையில் வெடி மருந்துகள் எடுத்துவந்தது தெரியவந்தது.
இது குறித்து கைமூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகமது தில்நாவாஜ் அகமது கூறியதாவது:
தீபக் குமார் வெடிமருந்துகளை ஒரு பருத்தி பையில் வைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் சோதனையில் ஈடுபட்ட எல்லை காவல் படையினர் அவரைக் கைதுசெய்து, விசாரணைக்காக கைமூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப் பிரதேசம்-பிகார் எல்லையில் உள்ள எல்லை காவல் படையினர் அழிவுகரமான நடவடிக்கைகளைத் தடுக்க உதவியுள்ளது.
பிகாரில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாச வேலையில் ஈடுபடும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம்.
மேலும் வரும் புதன்கிழமை (அக். 28) முதல்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களில் கைமூர் மாவட்டமும் ஒன்றாகும். நாங்கள் அவரது மொபைல் தொலைபேசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபக், "என்னை மதுபான கடத்தலுக்கு உள்படுத்த முயன்ற எனது கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களைப் பழிவாங்க நினைத்தேன். இந்நிலையில்தான் நான் வேலைபார்த்த நிலக்கரி பணிமனையில் எனக்கு மூன்று கையெறி குண்டுகளும் ஒரு டெட்டனேட்டரும் கிடைத்தன" எனக் கூறினார்.