புதுவை நைனார்மண்டபத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அலெக்ஸ். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த 28ஆம் தேதி அலெக்ஸ் மற்றும் இவரது நண்பர்கள் மார்ட்டின், சதீஷ், தம்பிமுத்து, ஆனந்த், சகாயராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடுரோட்டில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் சத்தமிட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலர் ரோமன் (32) உதவி ஆய்வாளர் வீரபத்ரசாமிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே உதவி ஆய்வாளர் வீரபத்ரசாமி மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் சிதறி ஓடினர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், தங்களை காட்டிக்கொடுத்த ரோமன் மீது மார்ட்டின் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து மார்ட்டின் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் ரோமனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், "உனக்குதான் சொல்றேன், நீ இருக்க மாட்ட டா; என்ன தொட்டு இருக்க கூடாது, தப்பு பண்ணிட்ட சிங்காரம் (ரோமன்)” என்று பேட்ட பட வசனத்தை பயன்படுத்தி ரோமனுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த ரோமன் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் வீரபத்ரசாமி வழக்குப் பதிவு செய்து மார்ட்டினை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:காரில் வந்த குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: காவல் துறை விசாரணை!