டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு இன்று (ஜன.31) உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நண்பர்களே.. இந்த ஆண்டு தொடங்கி நாடு தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் கொண்டாட்டமான, அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாட இருக்கிறது. யார் காரணமாக நமக்கு சுதந்திரம் கிடைத்ததோ, அப்படிப்பட்ட மகாநாயகர்களோடு தொடர்புடைய வட்டாரப் பகுதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இது ஒரு அற்புதமான, அருமையான சந்தர்ப்பம்.
நாம் சுதந்திரப் போராட்டம் மற்றும் பிஹார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நமோ செயலியில் குறிப்பிடப்படப்பட்டிருக்கும் வேறு ஒரு விஷயம் பற்றியும் பேச விரும்புகிறேன்.
சுதந்திர போராட்டம்
முங்கேரில் வசிக்கும் ஜெய்ராம் விப்லவ், தாராபுர் உயிர்த்தியாகிகள் தினம் பற்றி எழுதியிருக்கிறார். 1932ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று, தேசபக்தர்களின் கூட்டம் ஒன்றின் பல வீரம் நிறைந்த இளைஞர்களை, ஆங்கிலேயர்கள் தயவு தாட்சணியமே இல்லாமல் கொன்று போட்டார்கள்.
அவர்கள் புரிந்த ஒரே குற்றம் – வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியது தான். நான் அந்த உயிர்த்தியாகிகளுக்குத் தலைவணங்குகிறேன், அவர்களின் தைரியத்திற்கு சிரத்தையுடன்கூடிய நினைவாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன். நான் ஜெய்ராம் விப்லவுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அதிகம் தெரியாத, ஆனால் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இத்தகைய ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
தியாகிகள் குறித்து எழுதுங்கள்
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், சுதந்திரப் போர் முழுவீச்சில் போரிடப்பட்டு வந்தது. பாரதபூமியின் அனைத்து மூலைகளிலும் மகத்தான நல்மைந்தர்களும், வீராங்கனைகளும் தோன்றினார்கள்; இவர்கள் தேசத்திற்காகத் தங்களின் வாழ்க்கையையே தியாகம் புரிந்தார்கள். நமக்காகப் புரியப்பட்ட இந்தப் போராட்டங்கள், இவை தொடர்பான நினைவுகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, இவற்றை எழுத்துக்களில் வடித்து, நமது வருங்கால சந்ததிகளுக்கு இவற்றை உயிர்ப்போடு நாம் அளிக்க வேண்டும். நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும், சுதந்திரப் போராட்டம் தொடர்பான சம்பவங்கள் பற்றியும் கண்டிப்பாக எழுதுங்கள் என்று நாட்டுமக்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இளம் எழுத்தாளர்கள் முன்னெடுப்பு
உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வீரக்காதைகள் பற்றி, புத்தகங்களில் எழுதுங்கள். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை பாரதம் கொண்டாடும் வேளையில், உங்களின் எழுத்துக்கள், சுதந்திரப் போராட்ட நாயகர்களுக்கான உத்தமமான நினைவாஞ்சலிகளாகும். இந்தியாவின் 75 ஆண்டுக்கால சுதந்திரத்தை முன்னிட்டு, இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு முன்னெடுப்பு தொடங்கப்பட இருக்கிறது.
இதில் அனைத்து மாநிலங்கள்-மொழிகளைச் சேர்ந்த இளைய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கப்படும். தேசத்தில் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இதனால் உருவாக்கம் பெறுவார்கள், அவர்கள் நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆழமான அறிவு உடையவர்களாக இருப்பார்கள்.
உங்களை தொடர்புகொள்ளும் சந்தர்ப்பம்
இப்படிப்பட்ட மலரும் மொட்டுக்களுக்கு நாம் முழுமையாக உதவிகள் செய்ய வேண்டும். இதன் காரணமாக எதிர்காலப் போக்கைத் தீர்மானம் செய்யும் சிந்தனாசிற்பிகளின் ஒரு படை தயாராகும். இந்த முயல்வின் அங்கமாக ஆகவும், தங்களின் இலக்கியத் திறமைகளை அதிக அளவில் பயன்படுத்தவும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் எனது இளைய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இது தொடர்பான தகவல்களை நீங்கள் கல்வியமைச்சகத்தின் இணையதளத்தில் பெறலாம். நாட்டுமக்களே, எனக்கு மனதின் குரலில் மிகவும் பிடித்தமானது எது என்றால், அது உங்களிடமிருந்து நான் பெறும் கற்றல் தான். உங்களோடு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், ஒருவகையில் உங்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கிறது. ஒருவருடைய முயற்சி, பேரார்வம், நாட்டிற்காக சாதிப்பேன் என்ற உணர்வு, மன உறுதி இவை அனைத்தும் எனக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன. என்னுள் ஆற்றலை நிரப்புகின்றன” என்றார்.
இதையும் படிங்க: தேசிய கொடிக்கு அவமானம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது- பிரதமர் நரேந்திர மோடி