கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.எஸ். எடியூரப்பா, “காங்கிரஸ் மூத்த தலைவர் சித்த ராமையா, குமாரசாமி ஆகியோர் தங்களது அவதூறு பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் பொறுப்பற்ற பேச்சுகள் குறித்த ஆவணங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் இருவர் (குமாரசாமி, சித்த ராமையா) மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும்.” என்றார்.
“கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் யாருக்கு ஆதரவாக இருக்கும் என்ற கேள்விக்கு, “மக்களின் முடிவு பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். 15 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிப் பெறுவோம்” என்றார்.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் அங்கு முதல்கட்டமாக 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் பரப்புரையின் போது சித்த ராமையா, 17 சட்டமன்ற உறுப்பினர்களை எடியூரப்பா விலை கொடுத்து வாங்கி விட்டார் என்ற குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகவே அவதூறு வழக்கு தொடர எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வரலாற்றிலிருந்து திப்பு சுல்தானை துடைத்தெறிவோம் - எடியூரப்பா