நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதிகேட்டு போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவாக வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., கர்ணி சேனா, பாஜக அமைப்பினர் கூடுகைகள் நடத்திவருகின்றனர்.
அத்துடன், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண் மீது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.
அந்த வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பராதங்கியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவாஸ்தவா ஆவணத்தோடு கூறிய அருவருக்கத்தக்க கருத்துகள் பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களை கொதிப்படைய செய்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆதரவாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஹத்ராஸில் 19 வயது பட்டியலினப் பெண் இறந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு உயர் சாதி ஆண்களும் நிரபராதிகள். அந்தப் பெண்தான் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார்.
பட்டியலின இளம்பெண் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் உறவு வைத்திருந்தார். செப்டம்பர் 14ஆம் தேதி அன்று (குற்றம் நடந்த நாள்) தினை வயலுக்கு அந்தப் பெண்தான் அவர்களை அழைத்திருக்க வேண்டும்.
இந்தச் செய்தி ஏற்கனவே சமூக ஊடகங்களிலும் செய்தி சேனல்களிலும் வெளிவந்துள்ளன. அதற்குப் பிறகு அவர் இறந்திருக்க வேண்டும். இத்தகைய ஒழுங்கீனமான பெண்கள்தான் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் இறந்துகிடக்கின்றனர்.
அவர்கள் கரும்பு போன்ற வயல்களில், புதர்கள் மண்டிய பகுதிகளில், அடர்ந்த காடுகளில் இறந்துகிடப்பார்கள். அவர்கள் ஏன் நெல் அல்லது கோதுமை வயல்களில் இறந்து கிடப்பதில்லை? என யாரும் கேட்பதில்லை.
கரும்பு, சோளம், தினை போன்ற பயிர்கள் உயரத்தில் இருப்பதால் தவறான காரியங்களில் ஈடுபடும் தங்களை மறைத்துக் கொள்ளவே அங்கு ஒதுங்குகிறார்கள். இதுபோன்ற குற்றங்கள் நிகழும்போது யாரும் சாட்சியாக இருப்பதில்லை. அதனால் உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாவதில்லை.
இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும் நிரபராதிகள் என்று நான் உத்தரவாதத்துடன் சொல்ல முடியும்.
அவர்கள் சரியான நேரத்தில் விடுவிக்கப்படாவிட்டால், அவர்கள் மன துன்புறுத்தல்களை எதிர்கொள்வார்கள். இந்த இளைஞர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்
ஸ்ரீவஸ்தவாவின் கருத்திற்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, "பாஜக பிரமுகர் ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவாஸ்தவா ஒரு தலைவராக கருதப்படுவதற்கு தகுதியற்றவர். அவரது பேச்சின் மூலம் அவர் ஒரு பழைமைவாதி என்பதும், ஆணாதிக்க மனநோயாளி என்பதும் தெரியவருகிறது. பெண்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட மன வக்கிர கருத்துகள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடரப்படும்" என்றார்.
அருவருக்கத்தக்க சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய ஸ்ரீவாஸ்தா மீது 44-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, படுகொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது போன்ற குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.