இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு என்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சந்திப்பின்போது, மாமல்லபுரத்தில் உள்ள கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து ஜின்பிங்குக்கு மோடி எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பில் தலைவர்களுடன் இரு நபர்கள் மட்டுமே உடனிருந்தனர். அதில் இந்தியரான மது சுதன் ரவீந்திரன் என்பவர் இரு தலைவர்களின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்.
இவர், சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராகப் பணியாற்றிவருகிறார். கடந்தாண்டு சீனாவில் நடைபெற்ற இந்த இரு தலைவர்களின் சந்திப்பின்போதும், மது சுதனே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய தலைவர்களின் மொழிபெயர்ப்பாளராவது என்பது மிகச் சாதரணமான விஷயமில்லை. அதற்கு பல்வேறு மொழிகளைக் கற்று, மொழி ஆற்றலை வளர்த்திருக்க வேண்டும். அவ்வாறு தன்னை மது சுதன் வளர்த்துக் கொண்டதால்தான் தலைவர்களின் மொழிபெயர்ப்பாளராக செயல்படுகிறார். இந்த இடத்தை அவர் அடைவதற்கு படிப்படியாக முன்னேறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடித்த மது சுதன், 2007ஆம் ஆண்டு வெளியுறவுப் பணியில் இணைந்தார். தொடக்கத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலராக தன் பணியைத் தொடங்கிய இவர், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இரு ஆண்டுகள் பணியாற்றினார்.
2013ஆம் ஆண்டு மீண்டும் சீனாவில் இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது மது சுதன் முதன்மை செயலராகப் பணியாற்றி வருகிறார். தன் வாழ்வில் நீண்ட காலம் சீனாவிலேயே இவர் கழித்ததால், சீன மொழியான மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் இவருக்கு நன்றாகத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.