பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை (நவ.7) நடக்கிறது. இந்நிலையில் பூர்னியா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், “இதுதான் என் கடைசி தேர்தல்” என்றார். இது நிச்சயமாக வாக்காளர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது. அதேநேரம் ஜேடியூ, பாஜக உறவு சுமூகமாக இல்லை என்ற கருத்தையும் வலுப்பெற செய்துள்ளது.
மேலும், இதேபோன்று நிதிஷ் குமார் பேசுவது இதுதான் முதல்முறை. நிதிஷ் குமார் ஆட்சிக்கு எதிராக, மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை மேற்கொள்ளும் இச்சமயத்தில் நிதிஷ் குமாரின் கடைசி தேர்தல் பேச்சு எதிர்க்கட்சிகளின் பரப்புரைகளுக்கு உரமிடும் வகையில் அமைந்துவிட்டது. இந்தக் கருத்தை நிதிஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கனகச்சிதமாக திருப்புகின்றனர்.
நிதிஷ் குமார் தன்னிலை மறந்து கட்டுப்பாட்டை இழக்க வேறு சில காரணங்கள் உள்ளன. அவை, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ்வுக்கு ஆதரவான கோஷம், வெங்காயம் மற்றும் கல் வீச்சு என சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் மீறி நிதிஷ் குமார் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர் மாநிலத்தின் முதல் முதல்- அமைச்சர் கிருஷ்ணா சிங்கின் சாதனையை முறியடிப்பார்.
அவர் மாநிலத்தில் 15 ஆண்டுகள் முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். அடுத்து நிதிஷ் குமாரின் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் முக்கியத்துவம் அவருக்கு கொடுக்கப்படவில்லை. அனைத்து பேரணி, பரப்புரைகளிலிலும் ஓரங்கட்டப்படுவதாக தெரிகிறது. ஏன் நிதிஷ் குமார் தான் கலந்துகொள்ளும் பேரணிகளிலும், நாட்டின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரியுங்கள் என்கிறார். மாறாக, மாநில வளர்ச்சி குறித்து அவர் வாய் திறக்க மறுக்கிறார்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இரு கருத்துகள் நிலவுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான் என்று தேசிய ஜனநாயக கூட்டணியினர் கூறினாலும், சில தலைவர்கள் அவரை ஏற்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நிதிஷ் குமார் முதலமைச்சராக 31 விழுக்காடு மக்கள் விரும்புகின்றனர் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
மற்றொரு தகவலின்படி முதல் இரண்டு கட்ட தேர்தல் நிலவரம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திருப்திகரமாக இல்லை. பாஜகவின் முக்கிய தலைவர்களும் தங்களின் வெற்றி பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகின்றனர். நிதிஷ் குமாருக்கு முக்கிய போட்டியாளராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வளர்ந்து நிற்கிறார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் மகா கூட்டணி அமைத்து, முதலமைச்சர் வேட்பாளராக நிற்கும் தேஜஸ்வி யாதவ் மீதும் வாக்காளர்களின் கண்கள் திரும்பியுள்ளன. மறுபக்கம், ஆர்எல்எஸ்பி தலைவர் உபேந்திரா குஷ்வாகா, அசாதுதீன் ஓவைசி, பாப்பு யாதவ் ஆகிய தலைவர்களின் பரப்புரைகளும் கவனம் பெறுகின்றன.
மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் மீதும் மக்களின் பார்வை திரும்பியுள்ளது. இவர் பழைய கூட்டாளியான பாஜகவை விமர்சிக்காமலும், நிதிஷ் குமாரை வறுத்தெடுக்கும் வகையிலும் பல கூட்டணி மற்றும் பேரணிகளை நடத்தியுள்ளார். அந்தப் பேரணிகளில், “ஜூனியர் பஸ்வான், 2020 பிகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தோல்வியை தழுவுவார் என்றும் பாஜக கூட்டணியுடன் லோக் ஜனசக்தி மாநிலத்தில் ஆட்சியமைக்கும்” என்றும் கூறியுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியூ) வாக்குகளை லோக் ஜனசக்தி கட்சி பிரிக்கும். மற்றொரு தகவல் என்னவென்றால், நிதிஷ் குமாரை உள்ளூர் பாஜக தலைவர்களும் விரும்பவில்லை.!
இதையும் படிங்க: “பிகாரில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்”- சுதேஷ் வர்மா