இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் இணையம் மூலம் இணைப்பதால் கிராமப் பொருளாதாரம் வளர்ச்சியை காணும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, பாரத்நெட் என்ற திட்டம் மூலம் கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை அளித்து வருகிறது. வைஃபை வசதி மூலம் அளிக்கப்படும் இந்த இணைய சேவையை, ஆண்டிற்கு ரூ. 7000 முதல் ரூ. இரண்டு லட்சம் வரை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போதையை நிலவரப்படி, இந்த திட்டத்தின் கீழ் சுமார் 48 ஆயிரம் கிராமங்கள் பயனடைந்துள்ளன.
இந்நிலையில், பாரத்நெட் சேவை பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வரும் 2020 மார்ச் மாதம் வரை அதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், "1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத்நெட் திட்டம் மூலம் இணைய சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத்நெட் சேவை பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வரும் 2020 மார்ச் மாதம் வரை அதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுச்சேவை மையங்கள் மூலம் விரைவில் வங்கி சேவை அளிக்கப்படும். 2014ஆம் ஆண்டு 60 ஆயிரம் பொதுச்சேவை மையங்கள் செயல்பாட்டில் இருந்தன. இதன் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஹரியாணா மாநிலத்தில் மட்டும் 11 ஆயிரம் பொதுச்சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன" என்றார்.
டிஜிட்டல் கிராமம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பொதுச்சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் எண்ணற்ற அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. CSC e-Governance Service India Ltd என்ற நிறுவனம் இந்த டிஜிடல் இந்தியா முன்னெடுப்பை அமல்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் கிராமம் திட்டம் பெரும் மாற்றங்களை கொண்டுவரக்கூடும் எனக் கூறும் CSC e-Governance Service India Ltd தலைமை செயல் தலைவர் தினேஷ் தியாகி, "இத்திட்டத்தால் கிராமப் பொருளாதாரம் வளர்ச்சி காணும், நகர்புற-கிராப்புற டிஜிட்டில் பயன்பாட்டில் உள்ள இடைவேளை குறையும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க : மெட்ரோவில் மேளதாளத்துடன் பயணம்...