இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்பதால் சிறையில் ஏழு ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை பெற்ற கைதிகளை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மார்ச் இறுதி வாரத்தில் அறிவுறுத்தியது.
அதன்படி பல்வேறு மாநிலங்களும் கைதிகளை பரோலில் விடுவித்தன. உத்தரப் பிரதேச அரசும் சுமார் 12 ஆயிரம் கைதிகளை விடுவிக்கத் திட்டமிட்டது. மாநிலத்திலுள்ள பல்வேறு சிறையிலிருந்த கைதிகள் அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு நோட்டீசும் முகக்கவசங்களும் அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கோவிட்-19 பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராததால் 2,257 கைதிகளின் பரோல் காலத்தை மேலும் எட்டு வாரங்கள் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறைத் துறை ஐஜி வி.கே. ஜெயின் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 6,532 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 165 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: டிடிஆருக்கு பரவிய கரோனா!