நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது. அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிக்க தயாராகிவிட்டனர். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள சில கிராம மக்கள் தீபாவளியைக் கொண்டாடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
மாறாக நாள் முழுவதும் துக்கம் அனுசரிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணமாக காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஐதீகத்தைக் கூறுகிறார்கள். அதாவது 1192ஆம் ஆண்டு காலத்தில் அப்பகுதிகளை ஆட்சி செய்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னன் போரில் தோற்கடிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தீபாவளியைக் கொண்டாட மாட்டோம் என்று தெரிவிக்கின்றனர்.
நாட்டுக்காக சமர் புரிந்த எண்ணற்ற தலைவர்களை முன்னோர்களை மறப்பவர்களுக்கு மத்தியில் இக்கிராம மக்கள் தங்களின் கொண்டாட்டத்தையே தியாகம் செய்துவருவது ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. ஆனால் இம்மக்கள் தீபாவளிக்குப் பதில் ஏகாதசியை சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
நாடே ஒளிமயமாகவும் வண்ணமாகவும் இருந்தாலும் மிர்சாபூரிலுள்ள இந்தக் கிராமங்கள் களையிழந்து போய் தான் ஒவ்வொரு ஆண்டும் இருக்குமாம்.