சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தியின் முக்கிய தளமாக சபர்மதி ஆசிரமம் இருந்தது. அவர் 1917 முதல் 1930 வரை அங்கு வாழ்ந்தார். 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்க டிரம்ப் மோதிரா மைதானத்தை நோக்கிச் செல்வதற்கு முன்பு சபர்மதி ஆசிரமத்தில் சிறிது நேரம் செலவிடுவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
சபர்மதி நீர்முனையைப் பார்வையிட வருகை தரும் பிரமுகர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் மூன்று நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். செதுக்கும் வேலையுடன் கூடிய பாரம்பரிய நாற்காலிகள், பிளாஸ்டிக் போர்த்தல்களுடன் அழகாக பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த நாற்காலிகள் கண்ணுக்கினிய நீர்முனைக்கு அருகில் உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப்பின் வருகையை அடுத்து பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறையைத் தவிர, அமெரிக்க ரகசிய சேவையின் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். முன்னதாக, ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நிலவியது. எனினும் கடந்த காலங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தனர்.
இது பற்றிய தகவல்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எடுத்துரைக்கப்பட்டன. இதனால் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகைபுரிகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. 'நமஸ்தே டிரம்ப்' 'ஹவுடி, மோடி' ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அரசியல், கலாசாரம் சார்ந்த முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன், ஜாரெட் ஆகியோர் இந்தியாவில் 36 மணி நேரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய பயணத்தை முடித்துகொண்டு அவர்கள் ஜெர்மன் வழியாக அமெரிக்கா திரும்புகின்றனர். ட்ரம்பின் இந்தியப் பயணத்தில் அவருடன் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின், வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் மற்றும் எரிசக்தி செயலாளர் டான் ப்ரூலெட் ஆகியோர் அடங்கிய குழுவும் வருகிறது.
இந்தியாவில் அகமதாபாத், சபர்மதி ஆசிரமம், ஆக்ரா, டெல்லி ஆகிய இடங்களில் ட்ரம்ப் பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருடனான அரசியல் சந்திப்பு, பேச்சுவார்த்தை 25ஆம் தேதி நடக்கிறது.
இதையும் படிங்க: சிகரம் தொட்ட சிறுமிக்கு நரேந்திர மோடி வாழ்த்து