உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பத் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பயாலஜி பாடத்துக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாசப் படங்கள் பகிரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது, ஆய்வு செய்ததில் அது போலியான குரூப் என்பதும் பயாலஜி ஆசிரியரின் படம் குழுவின் டிபி (DP)ஆக இருந்ததால், மாணவர்கள் இணைந்துள்ளதும் தெரியவந்தது. பின்னர், உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பள்ளியின் முதல்வர், "எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் புகைப்படத்தை உபயோகித்து உருவாக்கப்பட்ட போலி வாட்ஸ்அப் குழுவானது சர்வதேச தொலைபேசி எண் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்துவிட்டோம். குழுவின் சாட்களை சில பெற்றோர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினார்கள். அதை ஆய்வு செய்ததில், மாணவர்களின் புகைப்படங்கள் அந்த அடையாளம் தெரியாத நபர் வாங்க முயற்சித்துள்ளது தெரியவந்தது. ஆனால், எந்த மாதிரியான புகைப்படங்கள் கேட்கப்பட்டது குறித்து தெளிவான தகவல் இல்லை" எனத் தெரிவித்தார்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், "குழுவில் பள்ளி ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டது மட்டுமின்றி மாணவர்களின் நம்பரை குழுவில் இணைத்ததன் மூலம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் நிச்சயமாக பள்ளியில் பணியாற்றும் ஊழியர் அல்லது பயிலும் மாணவராக இருக்கக்கூடும். அதே சமயம், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சமூக விரோதிகளின் செயலாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விசாரணை உத்தரப் பிரதேசம் காவல் துறையின் சைபர் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.