கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஒரு மாதங்களைக் கடந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவானது சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கிறது.
இந்த ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு மக்களும் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருவதால் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த நான்காம் தேதி முதல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஊரடங்கால் இழந்த பொருளாதாரத்தினை மீட்க தொழிலாளர் சட்டத்தில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக பணி நேர சுழற்சியினை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அளித்தால் பல்வேறு தொழில்களை புதுப்பிக்கவும், அதன் வருவாயை அதிகரிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தொழிலாளர் சட்டங்களுக்கு தற்காலிக விலக்கு அளிக்கவும், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தளர்வுகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய தொழிலாளர் சட்டங்களுக்கு மூன்றாண்டு காலம் விலக்களிக்க உள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. எனினும், பிணைத் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம், 1976, கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் 1996, பிரிவு 5 உடன் பெண்கள் மற்றும் குழந்தை தொடர்பான தொழிலாளர் சட்ட விதிகள் உள்ளிட்டவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போதுள்ள தொழிற்துறையை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வர அதிக முதலீட்டு வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய அவசியமும் உள்ளது என்ற அம்மாநில செய்தித் தொடர்பாளர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலின் உத்தரவு பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அதிகாரம் அல்லது நிதி கொடு'- மோடிக்கு ராவ் கோரிக்கை!