கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்திருக்கும் சூழலில், ஆக்ரா நகரில் இரண்டு நாள்களில் 28 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் (ஜூன் 22) ட்வீட் செய்திருந்தார். இந்தத் தகவல் ஆதாரமற்றது என்றும், இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறும் ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பிரபு நாராயன் சிங் பிரியங்காவுக்குக் கடிதம் எழுந்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய உத்தரப் பிரேதச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, "கோவிட்-19 வைரஸ் உத்தரப் பிரதேசத்தில் பரவத் தொடங்கிய நாளிலிருந்தே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
ஆக்ராவில் நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் குறித்து அவர் வெளியிட்ட செய்தி சுத்த பொய். ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் பிரியங்கா அந்த நோட்டீசுக்குப் பதிலளிக்கவில்லை என்றால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
முன்னர், வெளிமாநிலங்களிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவருவதாக காங்கிரஸ் கட்சி பேருந்து அரசியலில் ஈடுபட்டது. உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் லல்லு சிறைக்கு அனுப்பப்பட்ட போதும், பிரியங்கா அவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
எல்லைப் பகுதியில் நம் பாதுகாப்புப் படையினரின் துணிச்சல் குறித்து கேள்வி எழுப்புகிறார் ராகுல் காந்தி. நம் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி காங்கிரஸ். ஆனால், சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் போல செயல்பட்டுவருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, எல்லைக் கட்சிகளும் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டன. மறுத்த ஒரே ஆள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான்.
கோவிட்-19 பெருந்தொற்று குறித்தும், லடாக் எல்லை விகாரம் குறித்தும் ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் காந்தி குடும்பத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : பொய் குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ளுங்கள் : பிரியங்கா காந்திக்கு ஆக்ரா மாவட்ட ஆட்சியர் கடிதம்