கடந்த சில நாள்களாகவே எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கிடையே, நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்தும்விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கூறுகையில், "ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை, இந்திய, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் மேற்கொண்டனர்.
சர்வதேச விதிகளை மீறி சந்தேகத்திற்குரிய வகையில் அவர்கள் செயல்பட்டதால் ராணுவத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
தற்காப்புக்காக, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் ஊடுருவலில் ஈடுபட்ட ஐவர் கொல்லப்பட்டனர்" என்றார். மற்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆயுதமேந்திய ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் கைது!