மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாய சங்கத்தினர் கடந்த 20 நாள்களாகத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், விவசாயப் போராட்டம் தொடர்பாக சர்வதேச பெண்கள் மல்யுத்த வீரர்கள் மற்றும் சகோதரிகளான பபிதா போகாட், வினேஷ் போகாட் இடையே ட்விட்டர் போர் ஒன்று தொடங்கியுள்ளது.
முன்னதாக, பபிதா போகாட் தனது ட்விட்டரில், "விவசாயிகள் தொடங்கிய போராட்டத்தை சில சமூக விரோதிகள் தவறான பாதையில் வழிநடத்திவருகின்றனர். விவசாயிகள் உடனடியாகப் போராட்டத்தைக் கைவிட வேண்டும். பிரதமர் மோடி விவசாயிகள் உரிமை இழக்க ஒருபோதும்விட மாட்டார்" எனப் பதிவிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி, அடுத்த நாளே, சட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய் பிரச்னையைக் குறிப்பிட்டு பஞ்சாப் விவசாயிகளிடம் ஹரியானாவுக்குத் தண்ணீர் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். பபிதாவின் அடுத்தடுத்து ட்வீட்டுகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி கண்டனம் கிளம்பியுள்ளது. மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரான பபிதா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வினேஷ் போகாட், பபிதாவுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், "எந்தவொரு துறைக்குச் சென்றாலும் ஒரு வீரர் எப்போதும் ஒரு வீரர்தான். நீங்கள் எப்போதும் உங்கள் விளையாட்டின் மூலம் நாடு, மாநிலம், சமூகம் மற்றும் உங்கள் குடும்பத்தின் பெயரை உயர்த்தியுள்ளீர்கள்.
கிடைத்த கௌரவத்தையும் மரியாதையையும் காப்பாற்றுவது அவசியம். உங்களின் செயல்களும் கருத்துகளும், மக்களைப் புண்படுத்தாத வகையில் இருந்திட வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வினேஷின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். சமூக வலைதளங்களில் சகோதரிகளுக்கு இடையே நடக்கும் விவாதம் தற்போது அதிகளவில் ட்விட்டர் வாசிகளால் பகிரப்பட்டுவருகிறது.