திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்தார். இவர் மேற்கு திரிபுராவில் உள்ள மட்டுநகர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முடிவுகள் வரும் முன்னரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் எஸ்கே ராகேஷ் கூறுகையில், “தற்கொலை செய்து கொண்ட முதியவர் நேற்று (ஜூன் 1) காய்ச்சல் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 5 மணியளவில் கழிவறையில் அவரது உடல் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. அவருக்கு கரோனா இருப்பது இன்று காலை 11 மணிக்குதான் உறுதிசெய்யப்பட்டது” என்றார்.
இது குறித்து உயிரிழந்தவரின் தாயார் கூறுகையில், “மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கும்போது அவரிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இன்று காலை அவரது படுக்கையை பார்க்கும்போது அவரை காணவில்லை” என்றார். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் தெரிவிக்கும் போது, கரோனா குறித்த அச்சத்தில் முதியவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் 12 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி!