தமிழ்நாட்டில் நிலவும் வறட்சிக்கு காரணம் மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்தார். இதற்கு திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் விவாதிக்க கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்த பிறகுதான் இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க முடியும் எனக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதனை மறுத்தார். ஆனால் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கிரண்பேடி தெரிவித்த சர்ச்சையான கருத்துகளை விவாதிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஓம் பிர்லா ஆகியோர் முதலில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வாருங்கள், பிறகு விவாதிக்கலாம் என விளக்கமளித்தனர். பின்னர் டி.ஆர்.பாலு பேசும்போது பாஜகவினர் கூச்சலிடுகையில், அவர்களிடம் டி.ஆர்.பாலு ஆவேசமாக நடந்து கொண்டார்.