புதுச்சேரி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரிக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை மற்றும் முக்கியத் துறைகள் முழுவீச்சில் செயல்படும். விடுப்பில் சென்ற அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும். புதுச்சேரி காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்றார்.