மக்களவையில் உச்சநீதிமன்றம் மசோதாவில் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன. இதனை சரிசெய்வதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமான ஒன்றாகும்.
ஆனால் நீதிபதிகளின் நியமனங்களில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கும், பெண்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பதவி நியமனம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒரு சிலரைத் தவிர தலித் சமூகத்தை சார்ந்த யாரும் நீதிபதிகளாக இடம்பெறவில்லை.
மேலும் தென்னிந்திய மாநிலங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை எல்லாம் விரைவாக முடிப்பதற்கு ஏற்ற வகையில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னை அல்லது ஹைதராபாத் நகரங்களில் நிறுவவேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற பதவி நியமனங்களில் இடஒதுக்கீட்டை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மாநிலத்திற்கு ஒரு பிரதிநிதி என்ற முறையை மாற்றி, மாநிலத்திற்கு மூன்று நீதிபதிகளையாவது நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவை வரவேற்கிறேன் எனப் பேசினார்.