பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த மருத்துவர் உள்பட ஐந்து நபர்கள் சங்ரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் காரில் திரும்பியுள்ளனர். கார் சங்ரூர்-சுனம் சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று காரின் டீசல் பிடிக்கும் இடத்தில் மோதியிருக்கிறது. இதனால் டீசல் வெளியேறி கார் பற்றி எரிந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த அவர்களால் காரிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஐந்து பேரும் காரிலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சங்ரூர் மாவட்டக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.