தெலங்கானாவில் அம்மாநில போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 48 ஆயிரத்திற்கும் மேலானோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி; மகாத்மா காந்தி, மலக்பேட், முஷிராபாத் பேருந்து பணிமனை ஆகியப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தெலங்கானா மாநிலத்தில் பேருந்துகளை தற்காலிகமான ஓட்டுநர்களை வைத்து அரசு இயக்கி வருகிறது. இருப்பினும் போதிய பேருந்துகளின் சேவை இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மெட்ரோ ரயில் மூலம் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
போராட்டத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, கடந்த ஞாயிறுயன்று இரண்டு ஓட்டுநர்கள் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தனர். மற்ற இருவரில் ஒருவர் தன் மீது தீ வைத்துக் கொண்டும், ஒருவர் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.
2017ஆம் ஆண்டில் இருந்து ஊதிய உயர்வு அளிக்கப்படாததால், அதனை தரக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபடும் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், முன் வைக்கும் கோரிக்கையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏற்க மறுத்துள்ளார்.
மேலும் தசரா பண்டிகையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அவர் அறிவித்தது, ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி தெலங்கானா உயர் நீதிமன்றம் போக்குவரத்து ஊழியர்கள், முன்னெடுத்துச் செல்லும் ஜாயின் ஆக்ஷன் கமிட்டியிடம் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாநில அரசு மௌனம் சாதித்து வருவது ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அரசிடம் போதிய நிதி கையிருப்பு இல்லாததால் ஊழியர்கள் கேட்ட ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் வாரத்தில் போராட்டத்தை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் முக்கிய செய்திகள்: ஜப்பானில் போதி மரக்கன்று நட்ட ராம்நாத் கோவிந்த்!
பேரம் பேசிய மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் - பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு!