புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் பேசினார். மாநில முதலமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது என்றும் விவசாயம், தொழிற்சாலைகளை பாதிப்பு என மாநிலங்களுக்கு வருவாய் இல்லாததால் மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி பணத்தை நான்கு மாதங்களுக்கு மாநிலத்திற்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். கரோனா தொற்று வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வரும் 30ஆம் தேதிவரை ஊரடங்கை நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “தமிழ்நாடு அருகில் புதுச்சேரி இருப்பதால் நாம் தனியாக முடிவு எடுக்க முடியாது. மத்திய அரசிலிருந்து சில விதிமுறைகள் அளிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரியில் எந்த மத விழாக்களும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதால் தேவாலயங்களில் பாதிரியார் உள்பட மூன்று பேர் திருப்பலி நிறைவேற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியரும் அனுமதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று